டான் ஶ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதில் உடன்பாடுயில்லை

கோலாலம்பூர், மே.16-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக் கால ஒப்பந்தம், நீட்டிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடுயில்லை என்று பிகேஆர் கட்சித் தேர்தலில் தேசியத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

நாட்டின் நேர்மை, நம்பகத்தன்மையை உறுதி செய்யும் மிகப் பெரிய நெறிமுறைப் பீடமாக விளங்கும் எஸ்பிஆர்எம் தலைமைப் பொறுப்புக்கு அஸாம் பாக்கி இரண்டாவது முறையாகப் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது குறித்து தமது ஆட்சேபத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கத் தாம் தயாராக இருப்பதாக நூருல் இஸா குறிப்பிட்டார்.

வரும் மே 23 ஆ ம் தேதி நடைபெறவிருக்கும் பிகேஆர் தேர்தலில் கட்சியின் தேசியத் துணைத் தலைவராகத் தாம் தேர்வு செய்யப்பட்டால், அஸாம் பாக்கியின் மறுநியமனம் குறித்து தம்முடைய இந்த ஆட்சேபத்தை, தமது தந்தையும், பிரதமரும், பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வாரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டுச் செல்லத் தாம் தயாராக இருப்பதாக நூருல் இஸா தெரிவித்தார்.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான நூருல் இஸா, துணைத் தலைவர் பதவிக்கு நடப்பு துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லிக்குக் கடும் போட்டியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS