நீலாய், மே.16-
வீடு புகுந்து கொள்ளையடித்தல், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் இரண்டு கொள்ளையர்களைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
நேற்றிரவு இரவு 10 மணியளவில் நெகிரி செம்பிலான், நீலாயில் ஒரு கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் கார் நிறுத்தும் இடத்தில் அவ்விரு கொள்ளையர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
20 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அந்த இரு கொள்ளையர்களும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பேரா ஆகிய மாநிலங்களில் ஆயுதமேந்திய நிலையில் வீடுகள், தொழிற்சாலைகள், பொருள் பட்டுவாடா மையங்கள் முதலிய பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில ஈடுபட்டு வந்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ பாஃடில் மார்சுஸ் தெரிவித்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட 40 வயதுடைய கொள்ளையன், போதைப்பொருள், வன்முறை தொடர்பில் 76 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளான். 20 வயது மதிக்கத்தக்க நபர் அதே போன்ற குற்றச்செயல்களில் 11 குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாஃடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.