எப்ஃஆர்யூ பிரிவைச் சேர்ந்த 9 போலீஸ்காரர்களுக்கு மரணம் விளைவித்ததாக லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

தெலுக் இந்தான், மே.16-

தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது போலீஸ்காரர்களுக்கு மரணம் விளைவித்ததாக லோரி ஓட்டுநர் ஒருவர், தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

45 வயது ருடி ஸுல்கர்நாயின் மாட் ராடி என்ற கனரக வாகன ஓட்டுநர், நீதிபதி நொர்ஹாமிஸா ஷைபுஃடின் முன் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறை, 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், அந்த லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

கடந்த மே 13 ஆம் தேதி காலை 9.05 மணியளவில் கீழ் பேரா மாவட்டத்தில் தெலுக் இந்தான், ஜாலான் சுங்கை மானிக் சாலையின் 15 ஆவது கிலோமீட்டரில் கற்களை ஏற்றிக் கொண்டுத் தாம் செலுத்திய ஹீனோ ரக லோரியின் மூலம் எப்ஃஆர்யூ போலீஸ் லோரியை மோதி கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த போலீஸ்காரர் 44 வயது சார்ஜன் S. பெருமாள் உட்பட ஒன்பது போலீஸ்காரர்களுக்கு மரணம் விளைவித்ததாக அந்த லோரி ஓட்டுநர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனினும் அந்த லோரி ஓட்டுநர் தனக்கு எதிரான இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து கூடுதல் நிபந்தனைகளுடன் அவரை 6 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

முன்னதாக அந்த லோரி ஓட்டுநர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தெலுக் இந்தான் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS