ஜோகூர் பாரு, மே.16-
தனது கைப்பேசியில் ஆபாச வீடியோப் படங்களை வைத்திருந்ததாக ஆசிரியர் ஒருவர், ஜோகூர் பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
30 வயது குஸ்தி இஷாக் பிஃட்ரி ஷா என்ற அந்த ஆசிரியர் மாஜிஸ்திரேட் ஏ. ஷார்மினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அந்த குற்றச்சாட்டின் கடுமை மற்றும் அது எந்த அளவிற்கு ஓர் அரசு ஊழியருக்குப் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியுமா? என்று அந்த ஆசிரியரை நோக்கி மாஜிஸ்திரேட் ஷார்மினி வினவினார்.
என்னை நோக்கி சிரிக்க வேண்டாம், குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறீர்களா? இல்லையா? என்பது குறித்து மாஜிஸ்திரேட் ஷார்மினி வினவிய போது, குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோருவதாக அந்த ஆசிரியர் பதில் அளித்தார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் சஹாயாவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.