ஜார்ஜ்டவுன், மே.16-
பொருள் பட்டுவாடா நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்து வந்த ஆடவர் ஒருவரின் செயல் அம்பலமாகியுள்ளது. அந்த ஆடவரைப் போலீசார் வளைத்துப் பிடித்தது மூலம் 21 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
உள்ளூரைச் சேர்ந்த 41 வயதுடைய அந்த நபர், நேற்று காலை 9 மணியளவில் பட்டர்வொர்த்தில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் வாகன நிறுத்தும் இடத்தில் பினாங்கு போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக டத்தோ ஹம்ஸா குறிப்பிட்டார்.
அந்த ஆடவர் கைது செய்யப்பட்ட பின்னர் அந்த ஆடம்பர வீடமைப்புப் பகுதியில் அவர் வாடகைக்கு இருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்ட போது பல வகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு, 4 லட்சம் போதைப் பித்தர்கள் பயன்படுத்தக்கூடியதாகும் என்று அவர் விளக்கினார்.
போதைப் பொருளுடன் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 882 ரிங்கிட் ரொக்கப் பணம், ஒரு மெர்சடீஸ் பேன்ஸ் கார், மூன்று தங்கச் சங்கிலிகள், நான்கு மோதிரங்கள் உட்பட பல வகையான ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டதாக டத்தோ ஹம்ஸா மேலும் கூறினார்.