கோலாலம்பூர், மே.16-
சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில், சிகை அலங்கரிப்பு செய்து கொண்ட பெண்ணின் அனுமதியின்றி, டிக் டாக் நேரலையில் அவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தியக் குற்றத்திற்காகப் பெண் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 100 ரிங்கிட் அபராதம் விதித்தது.
23 வயது பெண் நூருல் ஹிடாயா யூசோப் என்ற அந்தப் பெண், தன்னிடம் சிகை அலங்கரிப்பு செய்து கொண்ட பெண், சிகை அலங்கரிப்புக்கு முன்பு எப்படி இருந்தார், சிகை அலங்கரிப்புக்கு பிறகு எப்படி இருக்கிறார் என்று கூறி இரு புகைப்படங்களைக் காட்சிக்கு வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்களைக் காட்சிக்கு வைத்ததாக நூருல் ஹிடாயா மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட பெண், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 10.50 மணியளவில் கோலாலம்பூர், செந்தூலில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.