தெலுக் இந்தான், மே.16-
கடமையாற்றச் செல்லும் அரச மலேசிய போலீஸ் படையின் கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த எப்ஃஆர்யூ போலீஸ்காரர்கள், எப்ஃஆர்யூ லோரியைப் பயன்படுத்துவதை விட எப்ஃஆர்யூ பேருந்தைப் பயன்படுத்துவதற்கு ஆலோசனை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
இந்தப் பரிந்துரை குறித்து ஆராய்வதற்கு உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதி இலாகாவின் கீழ் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தெலுக் இந்தானில் நிகழ்ந்த விபத்தில் எப்ஃஆர்யூ பிரிவைச் சேர்ந்த 9 வீரர்கள் உயிரிழந்த வேளையில் இதர ஒன்பது வீரர்கள் கடுமையாகக் காயமுற்றனர்.
தெலுக் இந்தான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள போலீஸ்காரர்களின் உடல் நிலையைக் கண்டறிய இன்று அந்த மருத்துவமனைக்கு நேரில் வருகைப் புரிந்த போது டான் ஶ்ரீ ரஸாருடின் இதனைத் தெரிவித்தார்.