ஜார்ஜ்டவுன், மே.16-
குண்டர் கும்பர் உட்பட பல்வேறு கடும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 35 வயது நபர், நேற்று பினாங்கு, பாயான் லெப்பாஸ், ஜாலான் லிந்தாங் புக்கிட் ஜம்பூலில் போலீஸ் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபருடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் சில நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.
குண்டர் கும்பல் தலைவனான சுட்டு வீழ்த்தப்பட்ட நபருடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்வதற்கு போலீசார் தற்போது தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
போலீசார் மேற்கொண்ட பூர்வாங்க விசாரணையில் சுட்டு வீழ்த்தப்பட்ட நபர் குண்டர் கும்பலின் தலைவன் மட்டுமல்ல, ஆயுதமேந்தியக் கொள்ளைகள், வீடு புகுந்து திருடுதல் உட்பட பல்வேறு கடும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது என்று டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.