பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்: பொது விவாதம் நடத்துவீர்

புத்ராஜெயா, மே.16-

பிகேஆர் கட்சித் தேர்தலில் மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியுள்ள தேசிய துணைத் தலைவர் பதவிக்கு யார் சிறந்த வேட்பாளர் என்பதை நிரூபிக்க தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் களமாக பொது விவாதம் நடத்துவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸாவும், நடப்பு துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியும் முன் வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொது விவாதத்திற்குத் தாம் தயார் என்று ரஃபிஸி ரம்லி பகிரங்கமாக அறிவித்துள்ள வேளையில், பொது விவாதம் நடத்தும் யோசனையை நூருல் இஸா நிராகரித்து விட்டார்.

துணைத் தலைவர் பதவிக்கு இருவருமே ஆற்றல் வாய்ந்தவர்கள் என்று கருதப்படும் நிலையில், மிகச் சிறந்த வேட்பாளர் யார் என்பதைப் பேராளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிரூபிக்க பொது விவாதம் நடத்தும்படி பல்வேறு தரப்பினர் அந்த இரு வேட்பாளர்களைத் தொடந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பிகேஆர் துணைத் தலைவர் தேர்தல் ஓர் ஆரோக்கிமானக் களமாக மாறுவதற்கு பொது விவாதத்தில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்வது அவ்விரு வேட்பாளர்களைப் பொறுத்தது என்று கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று அறிவித்துள்ளார்.

இருவரும் நன்கு அறியப்பட்ட முக்கிய நபர்கள் ஆவர். இருவரும் கட்சியின் சொத்துக்கள் மட்டுமல்ல, கட்சியின் வரலாற்றை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

எனவே, ஒரு விவாதத்தை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது வேட்பாளர்களைப் பொறுத்தது என்று புத்ராஜெயாவில் குடிநுழைவுத்துறையின் சிறந்த சேவைக்கான விருதளிப்பு நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிகேஆர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான டத்தோ ஶ்ரீ சைபுஃடின் தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS