கோலாலம்பூர், மே.17-
கோலாலம்பூர், செராஸ், தாமான் தேய்ந்தோன் வியூவில் ஹோம்ஸ்தேய் வீடொன்றில் சிங்கப்பூர் பிரஜைகளான ஒரு தம்பதியர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் சிங்கப்பூர் ஜோடியினர் இறந்து கிடந்தது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12.53 மணியளவில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.
ஹோம்ஸ்தேய் வீட்டுப் பணியாளர், அந்த தம்பதியர் வெகு நேரம் வெளியே வராமல் அறைக் கதவை பூட்டிக் கொண்டு, உள்ளே இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று போலீசுக்குத் தகவல் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
கதவைப் பலம் கொண்டு தட்டியும், கதவு திறக்கப்படாததால், மாற்று சாவியைப் பயன்படுத்தி, கதவைப் திறந்து பார்த்த போது ஓர் ஆணும், பெண்ணும் கட்டியில் சுயநினைவின்றி கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அறையிலிருந்து துர்நாற்ற வாடை வந்ததைத் தொடர்ந்து கதவைத் திறக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ அதிகாரிகள், அவ்விருவரின் உடல்களையும் பரிசோதனைச் செய்ததில், அவர்கள் இறந்து விட்டதை உறுதிப்படுத்தியதாக ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.
அவ்விருவரின் உடல்களிலும் எவ்விதக் காயமும் இல்லை. அவர்களின் மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக அய்டில் போல்ஹாசான் மேலும் கூறினார்.