மலேசியாவிற்கும் – ரஷ்யாவிற்கும் அணுக்கமான ஒத்துழைப்பு மற்ற நாடுகளுடனான உறவை பாதிக்காது: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உறுதி

காஸான், மே. 17-

மலேசியாவிற்கும், ரஷ்யாவிற்கும், இடையிலான நெருங்கிய உறவை, ‘வெற்றி அல்லது தோல்வி’ என்ற சூழ்நிலையில் பார்க்கக்கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், ஒரு தாராளமய வர்த்தக நாடாக, மலேசியா தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தனது கூட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டுடனான உறவை வலுப்படுத்துவது என்பது அமெரிக்கா உட்பட பிற நாடுகளுடனான உறவை பலவீனப்படுத்துவதாகப் பொருள்படாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மலேசியாவிற்கும், ரஷியாவிற்கும் இடையிலான உறவை, வெற்றி தோல்வி விஷயமாகப் பார்க்கக்கூடாது. இந்த உறவை ஆக்கப்பூர்வமான, பலாபலன் உறவாகப் பார்க்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிற்கு நான்கு நாள் அலுவல் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புவதற்கு முன்னதாக தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மாஸ்கோவுடன், கோலாலம்பூர் அணுக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் மலேசியா, பிற நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளைப் பாதிக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது பிரதமர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

இந்தப் பயணத்தின் போது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மற்றும் ரஷிய பிரதமர் மிக்க்யில் மிஷுஸ்தின் மற்றும் பல்வேறு தொழில்துறைத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தினார்.

உண்மையில், ஒரு தாராளமய வர்த்தக நாடாக, மலேசியாவின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசியா பரந்த மற்றும் சுயேட்சை வர்த்தகக் கூட்டு ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS