ஜோகூர் பாரு, மே.17-
சமூக வலைத்தளங்களில் தவறான பதிவேற்றம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அடிப்படை முகாந்திரம் உண்டு என்று கருதப்படும் பட்சத்தில் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, தனது விசாரணைக்கு யாரையும் அழைப்பதற்கு அந்த ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்
ஆபாசப் படங்கள், தகாத உறவு, பொய்யான செய்தி, அறுவருக்கத்தக்க மற்றும் அச்சுறுத்தும் உள்ளடக்கம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், இது குறித்து புகார் செய்யவில்லை என்ற போதிலும், இத்தகைய உள்ளடக்கங்களைப் பதிவேற்றம் செய்த நபரை விசாரணை செய்வதற்கு எம்சிஎம்சிக்கு அதிகாரம் உள்ளது என்று துணை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தனக்கு எதிராக விமர்சனத்தை அள்ளித் தெளித்துள்ள சமூக வலைத்தள பிரபலம் லைஃப் அஹ்மாட்டிற்கு எதிராக எம்சிஎம்சியிடம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா புகார் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையென்றாலும் வேறு தனி நபர்கள் அது குறித்து புகார் செய்து இருக்கலாம் என்று தியோ நீ சிங் விளக்கினார்.