பிகேஆர் தேர்தலில் பேராளர்களின் ஆதரவைப் பெறுவதற்குப் பணத்தை வாரியிரைத்தேனா? குற்றச்சாட்டை மறுத்தார் ரமணன்

ஷா ஆலாம், மே.17-

பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், பேராளர்களின் ஆதரவைப் பெறுவதற்குப் பணத்தை வாரி இரைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளார்.

பிகேஆர் தேர்தலில் உதவித் தலைவராகத் தாம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பண அரசியலை நடத்தி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரமணன் முற்றாக மறுத்தார்.

தாம் பண அரசியல் நடத்தி வருவதாகக் கூறி, தமக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ படங்களானது, சிலாங்கூர் மாநில பொதுத் தேர்தலுக்கு பிறகு தமக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பே தவிர அத்தொகையைப் பெற்றுக் கொண்டவர்கள் வாக்காளர்கள் அல்ல என ரமணன் தெளிவுபடுத்தினர்.

அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்ட தொண்டர்களே தவிர வாக்காளர்கள் அல்ல என்று ரமணன் விளக்கினார்.

தமது சேவை மையத்திற்கு வெளியே பணியாளர்களுக்குத் தாம் பணம் கொடுத்த போது, அதன் கதவில் பக்காதான் ஹராப்பான் சின்னம் இருப்பதைத் தெளிவாக காண முடியும். வேலை செய்தவர்களுக்குப் பணம் கொடுத்ததில் என்ன தவறு என்று ரமணன் வினவினார்.

WATCH OUR LATEST NEWS