ஆராவ், மே.17-
பெர்லிஸ் ராஜா, துவாங்கு சையிட் சிராஜூடின் ஜமலுலாயில் மாநிலத்தில் உள்ள சில அரசு ஊழியர்களின் அணுகுமுறைக்குத் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அவர்கள் பொதுச் சேவைக்கு மேலாகத் தனிப்பட்ட நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பெர்லிஸ் ராஜா குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அரசு ஊழியர்கள் தங்கள் பணி நெறிமுறைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அலுவலக நேரங்களைச் சிறப்பாக நிர்வகிப்பது உட்பட, ஒரு நேர்மறையான முன்மாதிரியாக அமைந்து பொதுச் சேவையின் நேர்மையை நிலைநிறுத்த வேண்டும் என்று பெர்லிஸ் ராஜா வலியுறுத்தினார்.
மக்களின் நலனை விடச் சுயநலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அரசு ஊழியர்கள் உள்ளனர். அதற்கான அறிக்கைகள் கிடைத்துள்ளன. மேலும் அவர்களின் பணித் தன்மையைத் தாம் நேரில் பார்த்ததாக பெர்லிஸ் ராஜா குறிப்பிட்டுள்ளார்.