கோலாலம்பூர், மே.18-
தரமான, பயனுள்ள கற்றல் – கற்பித்தலை உறுதிப்படுத்த ஒரு வகுப்பறையில் அதிகப்படியாக 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் Institut Pembangunan dan Kemajuan Inklusif Malaysia – மிண்டா யூகேஎம்மின் உதவி இயக்குநர் அனுவார் அஹ்மாட் பரிந்துரைத்துள்ளார். வகுப்பறையில் குறைவான மாணவர்கள் இருப்பதால் தரமான கற்றல் – கற்பித்தலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், வகுப்பறையில் கற்றல் வசதிகளும் சீர்திருத்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வகுப்பறைக்கும் வேகமான இணைய இணைப்பு, விவேகப் பலகை போன்ற கருவிகள் இருக்க வேண்டும் என்றும் அனுவார் கூறினார். வகுப்பறைகள் தற்போதையதை விட சிறந்த அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், வகுப்பறையில் இருந்து கல்வி சீர்திருத்தம் தொடங்கப்பட வேண்டும் என்ற கல்வி அமைச்சர் பாஃட்லீனா சீடேக்கின் யோசனை நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.