ஜார்ஜ்டவுன், மே.18-
சிறைச்சாலைச் சட்டத்தைத் திருத்துவதற்கான வரைவும், வீட்டுக் காவல் தொடர்பான புதிய சட்டமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு தற்போது அது சட்டத் துறையின் ஆய்வில் உள்ளது. குறிப்பாக விசாரணைக் கைதிகள், தீவிரமற்ற குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றவர்கள் ஆகியோருக்கு, சிறைத் தண்டனைக்குப் பதிலாக வீட்டுக் காவலைச் செயல்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இது தாக்கல் செய்யப்படும் என்றும், கொள்கை அளவில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தற்போது சட்டத் துறையின் திருத்தங்களுக்கான வரைவை உருவாக்கி வருகிறது. புதிய சிறைச்சாலைச் சட்டம், வீட்டுக் காவலுக்கு மாந்தநேய அணுகுமுறையை வழங்கும், சட்டப்பூர்வக் கட்டமைப்பை வழங்கும். இது சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் அதே நேரத்தில் கைதிகள் சமூகத்திற்குள் தங்கள் தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் என்றார்.