தெலுக் இந்தான், மே.18-
அண்மையில் நிகழ்ந்த தெலுக் இந்தான் விபத்தில் உயிரிழந்த மத்திய கலகத் தடுப்புப் படை வீரர் சார்ஜன் முகமட் ரோஸ்லான் அப்துல் ரஹிமின் மூன்று பிள்ளைகள் தேசியக் கல்விச் சேமிப்புத் திட்டமான எஸ்எஸ்பிஎன் மூலம் 1 இலட்சத்து 93 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பலன்களைப் பெற தகுதி பெற்றுள்ளனர். பிடிபிடிஎன் தலைவர் டத்தோ ஶ்ரீ நொர்லிஸா அப்துல் ரஹிம் கூறுகையில், 46 வயதான அந்த எப்ஃஆர்யூ வீரரின் சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிரைம், சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிளஸ் ஆகிய இரண்டு திட்டங்களில் செய்த சேமிப்பின் விளைவாக இந்த பலன்கள் கிடைத்தன என்றார்.
முகமட் ரோஸ்லான் கடந்த மே 7ஆம் தேதி தனக்காக சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிரைம் கணக்கைத் திறந்திருந்தார். இதன் மூலம் அவர் ஆயிரம் ரிங்கிட் தக்காபுஃல் பாதுகாப்பையும் மூவாயிரம் ரிங்கிட் மரண உதவித் தொகையையும் பெறத் தகுதிப் பெற்றார். மேலும், அவர் தனது மூன்று குழந்தைகளுக்காக 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி இந்தான் தொகுப்பின் கீழ் மூன்று சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிளஸ் கணக்குகளைத் திறந்திருந்தார். ஒவ்வொரு கணக்கிற்கும் மாதம் 30 ரிங்கிட் செலுத்தியதன் மூலம் ஒவ்வொரு பிள்ளைக்கும் 60 ஆயிரம் ரிங்கிட் வீதம், மொத்தம் 1 இலட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் விபத்து மரண தக்காபுஃல் பாதுகாப்பையும் மூன்று கணக்குகளுக்கும் சேர்த்து 9 ஆயிரம் ரிங்கிட் மரண உதவித் தொகையையும் பெறத் தகுதி பெற்றதாக நொர்லிஸா குறிப்பிட்டார்.