சிரம்பான், மே.18-
மலேசியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் அமைதி, நாட்டின் தனியுரிமை, நடுநிலைமை ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. மாந்தநேயக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் வரை, எந்தவொரு நாட்டுடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள மலேசியாவுக்கு உரிமை உண்டு என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்தார்.
காஸாவில் போர் நிறுத்தம் போன்ற உலகளாவிய விழுமியங்களைப் புறக்கணிக்கும் அல்லது மாந்தநேயத்தை மீறும் நாடுகளுடன் நட்பு கொள்ள விரும்பவில்லை என்று அவர் கூறினார். மலேசியாவின் ரஷ்யாவுடனான உறவு அமெரிக்கா, சீனாவுடனான நட்பைப் பாதிக்காது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார். மலேசியா ஒரு வர்த்தக நாடு என்பதால், உலகளாவியச் சந்தையை நம்பியிருக்கும் அதன் பொருளாதாரத்திற்குப் புதிய சந்தைகளைத் திறப்பது முக்கியம் என்றும் முகமட் ஹாசான் குறிப்பிட்டார். ரஷ்யா தொழில்நுட்பத் துறையில் நிறைய முதலீடுகளை வழங்க முடியும் என்றும், மலேசிய மாணவர்கள் தொழில்நுட்பத் துறையில் உயர்க்கல்வி கற்க 50 விழுக்காடு வரை உதவித் தொகை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.