ஈப்போ, மே.19-
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் 9 எப்ஃஆர்யூ போலீஸ்காரர்களுக்கு மரணம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட லோரி ஓட்டுநர், இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கற்களை ஏற்றி வந்த லோரி ஓட்டுநரான 45 வயது ரூடி ஸுல்கர்நாயின் மாட் ராடி என்ற அந்த நபர், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட போது, அவரை 6 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
எனினும் அவரை ஜாமீனில் எடுக்க யாரும் முன் வராததைத் தொடர்ந்து அவர், பேரா, பத்து காஜா போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டார்.
எனினும் அந்த லோரி ஓட்டுநரை, அவர் வேலை செய்த போக்குவரத்து நிறுவனம், ஜாமீன் வழங்க முன்வந்ததாக கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி டாக்டர் பக்ரி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.