பத்து பஹாட், மே.19-
உணவகம் ஒன்றில் பணிக்குச் சேர்வதற்கு நேர்முகப் பேட்டிக்குச் சென்ற இளம் பெண்ணை, மானபங்கம் செய்ததாக அந்த உணவக நிர்வாகி, ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 32 வயது முகமட் சல்லேஹூடின் ரோஸ்லி என்ற அந்த நிர்வாகி தனக்கு எதிரான குற்றத்தைப் ஒப்புக் கொண்டார்.
கடந்த மே 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் பத்து பஹாட்டில் உள்ள ஓர் உணவகத்தில் 19 வயது பெண்ணிடம் ஆபாசச் சேட்டைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணைக் கட்டியணைத்ததாகவும், இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவில் சட்டத்தின் கீழ் அந்த நிர்வாகி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.