தர்மராஜுவிற்குச் சிறைத் தண்டனை 6 மாதமாக அதிகரிப்பு

கோலாலம்பூர், மே.19-

கோலாலம்பூர், ஜாலான் டூத்தா டோல் சாவடிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதியரை மோதித் தள்ளி கடும் காயங்களை ஏற்படுத்திய நவாரா ரக வாகன ஓட்டுநரான கே.தர்மராஜுவிற்கு விதிக்கப்பட்ட 30 நாள் சிறைத் தண்டனை, 6 மாத காலமாக அதிகரிக்கப்பட்டது.

அதே வேளையில் அந்த நபருக்கு விதிக்கப்பட்ட 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம் மற்றும் வாகனமோட்டும் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது ஆகிய தண்டனையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிலைநிறுத்தியது.

சிறு வாகனங்களில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல், அவர்களை மோதித் தள்ளிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் தர்மராஜுவிற்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 30 நாள் சிறைத் தண்டனையை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பினர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீடு, உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

கடந்த மே 10 ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 49 வயது மாது சுஹாய்லிஸா ஷம்சுடின், நிரந்தர முடத்தன்மைக்கு ஆளாகினார். அவரின் 53 வயது கணவர் பைஃஸால் மாட் கழுத்து எலும்பு முறிந்து, மருத்துவமனையில் இன்னமும் தீவிர கண்காணிப்பு வார்ட்டில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS