ஜர்ஜ்டவுன், மே.20-
பினாங்கு மாநிலத்தில் இஸ்லாம் அல்லாத 6 வழிபாட்டுத் தலங்களின் நிர்மாணிப்புக்கு எதிராக ஊராட்சி மன்றத்தின் அமலாக்க நடவடிக்கைகள் பாய்ந்துள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் லிம் சியூ கிம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கொட்டகை வடிவிலான அந்த சிறு வழிபாட்டுத் தலங்கள், அரசாங்கத்திற்குச் சொந்தமான ரிஸாப் நிலத்தில் கட்டப்பட்டவையாகும்.
இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத்தலங்களின் நிர்மாணிப்பானது, பினாங்கு மாநில சட்டத் திட்டங்களுக்கு ஏற்ப அமைந்து இருப்பதை உறுதிச் செய்வதற்கு அமலாக்கத் தரப்பினர் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது என்று அவர் விளக்கினார்.
செபராங் பிறை உத்தாராவில் ஒன்றும், செபராங் பிறை தெஙாவில் இரண்டும், செபராங் பிறை செலாத்தானில் இரண்டும், திமூர் லாவுட் மாவட்டத்தில் ஒன்றும் இந்த வழிபாட்டுத் தலங்கள் அமைந்திருந்ததாக பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மாநில சமூக நல மேம்பாடு, இஸ்லாம் அல்லாதவர்களின் விவகாரப் பிரிவு பொறுப்பாளரான லிம் சியூ கிம் தெரிவித்தார்.