இன்னும் 10 ஆண்டுகளில் காணடிக்கப்படும் கட்சியாக பிகேஆர் மண் மூடப்படலாம்: எச்சரிக்கிறார் நூருல் இஸா

கோலாலம்பூர், மே.20-

தற்போது பிகேஆர் கட்சியில் நிலவி வரும் உட்பூசல்களினால் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள், ரெபோஃர்மாசி என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள அக்கட்சி, காணடிக்கப்பட்ட, ஒரு கட்சியாக மண்மூடி போகலாம் என்று கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நூருல் இஸா அன்வார் எச்சரித்துள்ளார்.

ஒருவருக்கொருவர், குடுமிப்பிடிச் சண்டையை நிறுத்தி விட்டு, பிகேஆர் கட்சி வளர்வதற்கும், அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கும், தேவையான முன்னேற்பாடுகளைச் செய்தால் மட்டுமே இக்கட்சி தொடர்ந்து வாழ முடியும் என்று நூருல் இஸா குறிப்பிட்டார்.

அடுத்த 24 மாதங்களில் நாம் ஒரு புதிய உத்வேகத்துடன் கட்சியின் பலத்தை ஒன்று திரட்ட வேண்டும். இவ்வார இறுதியில் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், கட்சி தொடர்ந்து மேல் எழும்பி, அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒற்றுமைமிக்கக் கட்சி மட்டுமே சாகா வரம் பெறும். வரக்கூடிய சவால்களைச் சமாளிக்க இயலும். இல்லையேல், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பிகேஆர் மறைந்து, மண்மூடிப் போகலாம் என்று நூருல் இஸா எச்சரிக்கை விடுத்தார்.

WATCH OUR LATEST NEWS