பத்து பாஹாட், மே.20-
கடல் வழியாக ஒரு கோடி ரிங்கிட் போதைப்பொருளைக் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியைக் கடல்சார் அமலாக்கத் துறையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இந்தக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநிலத்திற்கான துணை இயக்குநர் காமா அஸ்ரி காமீல் தெரிவித்தார்.
உளவுத்துறை மூலம் கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து ஜோகூர், பத்து பாஹாட், சுங்கை ஆயாம் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாகச் சென்று கொண்டிருந்த ஓர் அந்நியப் படகு வழிமறிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடல்சார் போலீசாரின் வருகையைக் கண்டு, படகை, சேரும் சகதியும் நிறைந்த சதுப்பு நிலக் காட்டுப் பகுதிக்குச் செலுத்தி, தப்பிக்க முற்பட்ட இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
படகிலிருந்து 12 பிளாஸ்டிக் கோணிப் பையில் ஒரு கோடி ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காமா அஸ்ரி காமீல் தெரிவித்தார்.