வீட்டை விட்டு வெளியேறியவர், காணவில்லை

குவாந்தான், மே.21-

கடந்த மே 14 ஆம் தேதி குவாந்தான், புக்கிட் உபியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய ஓர் இந்திய இளைஞர், கடந்த ஒரு வார காலமாக வீடு திரும்பவில்லை என்று போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

36 வயது பாலமுருகன் தண்டபாணி என்ற அந்த இளைஞர், சம்பவத்தன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியே சென்று வருவதாகக் கூறிப் புறப்பட்டவர், இதுவரை வீடு திரும்பாதது குறித்து அவரது மனைவியும், குடும்பத்தினரும் மிகுந்த அச்சம் கொள்வதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் புசு தெரிவித்தார்.

கைப்பேசியோ அல்லது அடையாள ஆவணமோ எதனையும் அவர் எடுத்துச் செல்லவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஓர் இந்தியப் பிரஜையை தனது வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டுள்ள பாலமுருகன், கடந்த 18 ஆண்டு காலமாக மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார்.

கடன் தொல்லைக் காரணமாக, மளிகைக் கடையை மூடிவிட்டார். இந்நிலையில் பாலமுருகன் குறித்து அவரின் நண்பர்களிடம் விசாரித்த போது, எந்தத் தகவலும் இல்லை என்று ஏசிபி வான் முகமட் ஸாஹாரி குறிப்பிட்டார்.

பாலமுருகனைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஏசிபி வான் முகமட் ஸாஹாரி பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS