ஜார்ஜ்டவுன், மே.21-
பினாங்கு மேம்பாட்டுக் கழகமான பிடிசி தனது ஊழியர்களுக்கு 6 மாதச் சம்பளத்தை, போனஸ் தொகையாக வழங்குவதற்கு எடுத்துள்ள முடிவை, பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் இன்று தற்காத்துப் பேசினார்.
6 மாதச் சம்பளத்தை போனஸ் தொகையாக பிடிசி அறிவித்து இருப்பதில், சர்ச்சை செய்வதற்கோ, கேள்வி எழுப்புவதற்கோ ஒன்றுமில்லை என்று சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.
பிடிசி மிகச் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளது. எனவே 6 மாதச் சம்பளத்தை போனசாக அது அறிவித்து இருப்பது அதன் சிறந்த செயல்பாட்டு அடைவு நிலைக்கு வழங்கப்பட்ட வெகுமதியே தவிர அரசியல் செல்வாக்கினால் அல்ல என்று சோவ் கோன் யோவ் விளக்கினார்.
பிடிசி எடுத்துள்ள முடிவு குறித்து பினாங்கு முன்னாள் முதலமைச்சரும், ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் எழுப்பியுள்ள கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கையில் சோவ் கோன் யோவ் இதனைத் தெரிவித்தார்.