பேருந்து தீப்பற்றிக் கொண்டதில் 6 பல்கலைக்கழக மாணவர்கள் உயிர் தப்பினர்

ஜோகூர் பாரு, மே.21-

பல்லைக்கழகப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்துக் கொண்டதில் அந்த பேருந்தில் பயணம் செய்த மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் ஜோகூர், ஸ்கூடாய், யுடிஎம் பல்கலைக்கழக வளாகத்தில் ஜாலான் லிங்காரான் இல்முவில் நிகழ்ந்தது. ஆறு மாணவர்களுடன் அந்தப் பேருந்து, பல்கலைக்கழக வளாகத்தை நெருங்கிக் கொண்டு இருந்த வேளையில் இந்த தீச்சம்பவம் நிகழ்ந்தது.

தீ பரவுதற்கு முன்னதாக, பேருந்தின் பின்புறத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டது. டயர் வெடித்து விட்டதாகக் கருதி, பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தி, அதன் ஓட்டுநர் சோதனை செய்து கொண்டு இருந்த போது, திடீரென பள்ளி பேருந்தில் தீ சூழ்ந்து கொண்டது.

எனினும் பேருந்தில் 6 மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேறி தங்கள் உயிரைக் காப்பற்றிக் கொண்டனர் என்று அந்த பல்லைக்கழகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS