ஷா ஆலாம், மே.21-
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலானது, பதவிகளைக் கைப்பற்றுவது அல்ல என்று உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
கெஅடிலான் என்ற நீதிக் கட்சியின் தேர்தலானது, பதவிகளுக்குப் போட்டியிடும் அதே வேளையில் ஜனநாயகத்தை வளர்ப்பதற்கும், கட்சியில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடைபெறும் ஒரு தேர்தல் களமாகும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சருமான ரமணன் வர்ணித்தார்.
கட்சியின் தேர்தல் நடைமுறையானது, அதன் முதிர்ச்சிக்குச் சான்றாகும். பிகேஆர் கட்சி அமைக்கப்பட்டது முதல் அது எப்போதுமே சீர்திருத்தக் கொள்கைகளை நிலை நிறுத்தி வருவதாக ரமணன் தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பிளவுகளைத் தவிர்க்க, உயர் மட்டப் பதவிகளுக்குத் தேர்தல் ஒரு களமாக, ஓர் அளவுகோலாக பயன்படுத்தப்பட்டு வருவதாக ரமணன் குறிப்பிட்டார்.