மெந்தாக்காப், மே.21-
தொழிலாளர்களுக்கு அதிகப்படியாகச் சம்பளத்தை உயர்த்துவதை விட விண்ணை முட்டும் விலைவாசிகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாாளர் டத்தோ ஜி. சங்கரன் கேட்டுக் கொண்டார்.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், 1,700 ரிங்கிட்டாக அரசாங்கம் உயர்த்திக் கொடுத்தாலும் கூட, இன்று அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் இந்தத் தொகை போதாது. இந்தத் தொகையை 2,000 ரிங்கிட்டாக அதிகரித்தாலும் கூட நடப்பு விலைவாசிகள் மத்தியில் இந்தச் சம்பளம் போதாது.
எனவே விலைவாசிகளைக் குறைத்தால் மட்டுமே நடப்பு சம்பளத் தொகை, வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க இயலும் என்று டத்தோ ஜி. சங்கரன் கேட்டுக் கொண்டார்.
இன்று மெந்தாக்காப்பில், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பகாங் மாநில பேராளர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஜி. சங்கரன் மேற்கண்டவாறு கூறினார்.
குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்ட பிறகு தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலைப் பளு, முன்பை விட இரு மடங்காக தோட்ட நிர்வாகங்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதனைச் சங்கம் கடுமையாக எதிர்ப்பதாக டத்தோ ஜி. சங்கரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.