சிரம்பான், மே.21-
நேர்த்தியான நிர்வாகம், ஆற்றல் வாய்ந்த பொறுப்பாளர்கள் , வெளிப்படையிலான கணக்கு விவரங்கள் என பல்வேறு சிறப்புகளைத் தாங்கியுள்ள சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜாஃபாரில் வீற்றிருக்கும், ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் சிவன் கோவில் நிர்வாகம், நாட்டில் முன்னுதாரண ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்று கணக்காய்வாளர் நிறுவனத்தினால் பாராட்டும், புகழாரமும் சூட்டப்பட்டது.
கோவிலின் நிதியியல் அறிக்கை, சரிவரக் காட்டுப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து, கணக்கு வழக்குகள் சரிபார்த்துக் கொடுப்பது கணக்காய்வாளர் நிறுவனத்தின் பணியாக இருந்தாலும், ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் சிவன் கோவில் நிர்வாகத்தின், கணக்காய்வு நிறுவனமான ஆனந்தன் செல்லையா அண்ட் அஸ்சோசியட்ஸ் பொறுப்பாளர்கள், ஆலயத்தின் ஆண்டுக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலயத்தின் ஆண்டுக் கூட்டத்தில் ஆனந்தன் செல்லையா அண்ட் அஸ்சோசியட்ஸ் கணக்காய்வு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஆனந்தன் செல்லையா மற்றும் அந்த நிறுவனத்தின் உதவி நிர்வாகி ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓர் ஆலயத்தின் வரவு, செலவு, அதன் நடவடிக்கைகள், செலவிடப்படும் முறை குறித்து மிகத் துல்லியமானக் கணக்கு விவரங்கள், முறையான ஆவணங்களுடன் வெளிப்படையாகக் காட்டியிருப்பது, ஒவ்வோர் ஆண்டும் கணக்கு விபரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தங்களை பிரமிக்க வைப்பதாக ரேகா விளக்கினார்.
ஓர் ஆலயத்தின் கணக்கு விவரங்கள் எந்த அளவிற்கு வெளிப்படையாக உள்ளதோ, அதுவே மிக நேர்த்தியான நிர்வாகம் என்பதற்கு ஸ்ரீ மகா ராஜராஜேஸ்வரர் சிவன் கோவில் ஒரு முன்னுதாரணமாகும் என்று பல கோவில்கள், தேவாலயங்கள், குத்வராக்கள் போன்றவற்றுக்கு கணக்காய்வுப் பணியை மேற்கொண்டு வரும் ஆனந்தன் செல்லையாவும்,ரேகாவும், விளக்கினர்.