ஷா ஆலாம், மே.21-
தொழிலாளர் நலனுக்கான ஒரே அளவுகோல், குறைந்தபட்ச ஊதிய விகிதம் மட்டுமல்ல,. மாறாக சிஏ எனப்படும் கூட்டு ஒப்பந்தம் வாயிலாக வழங்கப்படும் சலுகைகள் மற்றும் நியாயமான ஊதியங்களும் அடங்கும் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
நியாயமான சலுகைகள் மற்றும் ஊதியங்களைப் பெறுவதற்கு விரிவான பேச்சுவார்த்தை நடத்துவது என்பது ஒரு நெகிழ்வான கருவியாகும் என்று ஸ்டீவன் சிம் வர்ணித்தார்.
1967 ஆம் ஆண்டு தொழில்துறை உறவுச் சட்டத்தின் கீழ் கூட்டுச் சம்பள ஒப்பந்தம், சட்டப்பூர்வ சக்தியையும் கொண்டுள்ளது. அதற்கு இணங்க மறுக்கும் முதலாளிகளைச் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும் என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
ஷா ஆலாமில் உள்ள Otomobil Nasional Sdn. Bhd. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் தொழிற்சங்கத்திற்கு இன்று மேற்கொண்ட அலுவல் வருகையின் போது ஓர் அறிக்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தொழில் உறவு சட்டமானது, தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் சட்டப் பாதுகாப்பையும் வழங்க வல்லதாகும்.
இது இணக்கமான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட தொழில்துறை உறவுகளுக்கு அடிப்படையாகும் என்று ஸ்டீவன் சிம் விளக்கினார்.