கோலாலம்பூர், மே.21-
நம்மைச் சுற்றிலும் நடைபெறுகின்ற குற்றம்-குறைகளை மட்டும் பேசிக் கொண்டு பிரிந்து நிற்பதைக் காட்டிலும், கண்ணில் தென்படும் நன்மையைப் பேசி, ஒருவருக்கொருவர் அரவணைத்து, நடக்கின்ற நல்லவற்றை முன்னிறுத்தி ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம் என்று பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் உலு சிலாங்கூர் தொகுதித் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
நேற்று கோலாலம்பூர், பூமலை, லேக் கார்டன் கிளப்பில் சிலாங்கூர் இந்திய நிர்வாக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் டாக்டர் சத்யா பிரகாஷ் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த காலங்களில் மித்ரா நிதி பரிவர்த்தனை குறித்து, தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தோம். அப்படி கேள்வி கேட்ட நம் கட்சியே இன்று ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இது குறித்த வெளிப்படைத் தன்மையோ, மித்ரா நிதி பரிவர்த்தனை குறித்தோ வெளிப்படையாக ஒன்றும் தெரியவில்லை.
இது போன்ற இன்னும் ஏராளமான விவகாரங்கள் குறித்து, தெரிய வேண்டிய இடத்திற்குத் தெரியவில்லை. இந்திய சமுதாயத்திற்காகக் குரலை எழுப்ப வேண்டியவர்கள் எழுப்புவதில்லை. இது சம்பந்தப்பட்டவர்களிடம் போய் சேரவில்லை. இதனால்தான் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. எனவே இந்தியர்கள் ஒன்றுபட்டு செயல்பாட்டால் பல விஷயங்களைச் சாதிக்க முடியும் என்று டாக்டர் சத்ய பிரகாஷ், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
இதனிடைய வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பிகேஆர் தேர்தலில் தன்னைத் தேசிய உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கும்படி பிகேஆர் கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சத்யா பிரகாஷ் அனைத்துப் பேராளர்களையும் கேட்டுக் கொண்டார்.
தைரியமாகக் குரல் கொடுத்து இந்திய சமுதாயத்திற்குச் சேவையாற்ற கூடிய தலைவர்களைத் தேர்வு செய்தால் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்று டாக்டர் சத்யா பிரகாஷ் உறுதியாகக் கூறினார்.