ஜோகூர் பாரு, மே.21-
சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாகனமோட்டும் புதிய லைசென்ஸ் அட்டையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
மலேசியர்களின் வாகனமோட்டும் உரிமமான புதிய வகை லைசென்ஸ், இன்று புதன்கிழமை முதல் நாடு முழுவதும் கட்டம் – கட்டமாக விநியோகிக்கப்படும் என்று ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பாஃட்லி ரம்லி அறிவித்துள்ளார்.
மலேசியப் பிரஜைகள் மற்றும் மலேசியப் பிரஜைகள் அல்லாதவர்கள் என்ற நிலையில் இரு வகையான புதிய லைசென்ஸ் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வடிவமைப்பிலான லைசென்ஸ், எளிதில் சேதப்படாது என்றும், போலி லைசென்ஸ்கள் தயாரிப்பு மோசடிகளைத் தடுக்க வல்லதாகும். இது பத்து ஆண்டுகள் தாங்கும் அளவிற்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைசென்ஸ் தோற்றத்தில் சுல்தான் அப்துல் சாமாட் கட்டடம், இஸ்தானா நெகாரா மற்றும் மலர் வடிவம் ஆகியவை பின்னணி உருவமைப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று டத்தோ ஏடி பாஃட்லி விளக்கினார்.