கோத்தா பாரு, மே.22-
ஸ்பா சிகிச்சை மையத்தில் அதன் நடத்துநர் மீது எரிதிரவக வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைக்கு உதவும் வகையில் 38 வயதுடைய மாது ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிளந்தான், பாச்சோக், பெரிஸ் கூபுர் பெசாரில் கடந்த வாரம் சனிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தீவிரத் தேடுதல் வேட்டையில் அந்தப் பெண், நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் கோல கிராயில் ஒரு ரப்பர் தொழிற்சாலை முன் கைது செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் கைப்பேசி மற்றும் பெரோடுவா மைவி கார் முதலியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக கிளந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் தெரிவித்தார்.
வாடிக்கையாளர் என்ற போர்வையில் வந்ததாக நம்பப்படும் அந்த மாது, ஸ்பா மைய உரிமையாளரான 27 வயது பெண்ணின் முகத்தில் இந்த எரிதிரவக வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளார். முகத்தில் கடும் தீக்காயங்களுக்கு ஆளான ஸ்பா நடத்துநர், மலேசிய அறிவியல் பல்லைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.