கோலாலம்பூர், மே.22-
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தல் முடிவை மையமாகக் கொண்டு, அமைச்சரவை சீரமைக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் அமைச்சரவையிலிருந்து யாரும் பதவி விலகினால் தடுக்கப்படாது என்று பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
பிகேஆர் கட்சித் தேர்தல் என்பது கட்சிக்குள் நடைபெறும் போட்டியாகும். இந்தப் போட்டிக்கும், அமைச்சரவை சீரமைப்புக்கும் தொடர்பு இல்லை என்பதை டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.
கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் என்பதும், முக்கியப் பதவிகளுக் போட்டி என்பதும், கட்சியை வலுப்படுத்துவதற்கும், அனைத்து பலத்தையும் ஒருங்கிணைப்பதற்கும் நடைபெறும் ஒரு ஜனநாயக நடைமுறையாகும்.
அதே வேளையில் பிகேர் தேர்தல் என்பது சொந்த நண்பர்கள், பால்ய சகாக்கள் மற்றும் தங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும். எனவே இதற்கும், அமைச்சரவைச் சீரமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
மிகப் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பிகேஆர் கட்சித் துணைத் தலைவர் தேர்தலில் தம்மை எதித்துப் போட்டியிடும் அன்வாரின் புதல்வியும், உதவித் தலைவருமான நூருல் இஸாவிடம் தாம் தோல்விக் காணும் நிலை ஏற்படுமானால், அமைச்சரவையில் தாம் அங்கம் வகித்து வரும் பொருளாதார அமைச்சர் பதவியிருந்து விலகப் போவதாக கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அறிவித்து இருப்பது தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் எதிர்வினையாற்றியுள்ளார்.