மேல்முறையீட்டில் புங் மொக்தாரும், அவரின் மனைவியும் தோல்வி கண்டனர்

புத்ராஜெயா, மே.22-

தங்களுக்கு எதிரான 28 லட்சம் ரிங்கிட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் எதிர்வாதம் புரிவதற்கு, பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மறுபரிசீலனைச் செய்யக் கோரி, சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடினும், அவரின் மனைவி ஸீஸீ ஐஸெட் அப்துல் சாமாட்டும் செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

டத்தோ சீ ருஸீமா காஸாலி தலைமையிலான மூவர் அடங்கிய அப்பீல் நீதிமன்றக் குழுவினர், நீதிமன்றத்தின் முடிவை மறுபரிசீலனைச் செய்யக் கோரி, அத்தம்பதியர் செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை ஒரு மனதாக நிராகரிப்பதாக அறிவித்தனர்.

முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனைச் செய்ய வேண்டிய விதிவிலக்கான சூழ்நிலைகள் அல்லது நீதி தவறியதை நிரூபிக்கும் வரம்பைப் பூர்த்தி செய்ய புங் முக்தார் ராடினும், அவரின் மனைவி ஸீஸீ ஐஸாட் அப்துல் சாமாட்டும் தவறிவிட்டனர் என்று நீதிபதி டத்தோ சீ ருஸீமா காஸாலி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, செப்டம்பர் 7 ஆம் தேதி, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து கினபாத்தாஙான் எம்.பி.யையும், அவரின் மனைவியையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இவ்விருவரின் விடுவிப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட மேல்முறையீட்டிற்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அத்துடன் அத்தம்பதியர், தங்களுக்கு எதிரான மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வாதம் புரியும்படி உத்தரவிட்டது.

WATCH OUR LATEST NEWS