பினாங்கில் குறைந்தது 7 பாரம்பரியக் கோவில்கள் நிலப் பிரச்னைக்குத் தீர்வு

ஜார்ஜ்டவுன், மே.22-

பினாங்கு மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பாரம்பரியக் கோயில்களின் நில உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுவதில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு வலுவான மற்றும் விரிவான பங்களிப்பு வழங்கப்பட வேண்டும் என பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, மாநில அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

பினாங்கு மாநில அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக தாம் இடம் பெற்றது முதல் பினாங்கைச் சுற்றியுள்ள குறைந்தது ஏழு பாரம்பரியக் கோயில்களுக்கான நில உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க தாம் முயற்சிகள் மேற்கொண்டதாக சுந்தராஜு சுட்டிக் காட்டினார்.

ஆலய நிர்வாகத்தினர், தனியார் நிலை உரிமையாளர்கள், சுங்கை பஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம் தலைமையிலான இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் நடவடிக்கைக் குழு ஆகியவற்றின் அணுக்கமான ஒத்துழைப்பு வாயிலாக இது சாத்தியமாகியதாக பினாங்கு சட்டமன்றக் கூட்டத்ய்ஹில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் சுந்தராஜு இதனைத் தெரிவித்தார்.

ஜெலுதோங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு ஒரு தனியார் நிறுவனத்தால் நில உரிமை வழங்கப்பட்டது, லாடாங் பெனாந்தியில் மத்தியஸ்தர் நடைமுறையின் மூலம் நிலம் வாங்கப்பட்டது மற்றும் தாசேக் கெளுகோர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்தின் இடத்தைக் குத்தகைக்கு எடுத்தது ஆகியவை இதுவரை அடையப்பட்ட வெற்றிகளில் அடங்கும் என சுந்தராஜு விளக்கினார்.

பாரம்பரிய ஆலயங்களின் பிரச்னை விவகாரத்தில் புக்கிட் தெஙா சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் முன் வைத்துள்ள கருத்துக்குத் தாம் உடன்படுவதாக குறிப்பிட்ட சுந்தராஜூ , இவ்விவகாரத்தை நாம் உணர்வுப்பூர்வமாக அல்ல, புறநிலையாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மதத்தைப் பொருட்படுத்தாமல், பாரம்பரிய வழிபாட்டுத் தலங்கள், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்பிய சமூகங்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளங்களாகும். அவை மதிக்கப்பட வேண்டும். சர்ச்சைக்குரியதாக இருக்கக்கூடாது என்று சுந்தராஜு வலியுறுத்தினார்.

அதே வேளையில் எந்தவொரு தரப்பினரும், எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் “ஹராம்” என்று முத்திரை குத்தவோ அல்லது அழைக்கவோ தேவையில்லை என்பதையும் சுந்தராஜு ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS