கோலாலம்பூர், மே.23-
முன்னாள் சட்டத்துறை தலைவர் அஹ்மாட் தெரிருடின் முகமட் சால்லேவிற்கு எதிராக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுப்பதற்கான அனுமதி கேட்டு, வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தம்முடைய 12 ஆண்டு சிறைத் தண்டனையை அரச மன்னிப்பு வாரியம், 6 ஆண்டுகளாகக் குறைத்த போது, எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்குப் பிறப்பிக்கப்பட்ட அரசாணை உத்தரவை, நாட்டின் ஏஜி என்ற முறையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளிகொணரத் தவறிவிட்டார் என்று கூறி, அவருக்கு எதிராக நஜீப், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்துள்ளார்.
நஜீப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அஹ்மாட் தெரிருடின் முகமட் சால்லேவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வதற்கான அனுமதி கேட்டு, கடந்த புதன்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக நஜீப்பின் முதன்மை வழக்கறிஞர் முகமட் ஷாஃபி அப்துல்லா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.