ஜோகூர் பாரு, மே.23-
நாட்டை வழிநடத்தி வரும் ஒற்றுமை அரசாங்கத்தில், பிரதானக் கட்சியாகத் திகழும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்களிப்பு மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.
பிகேஆர் தலைவர் பதவிக்கு அதன் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றித் தேர்வு செய்யயப்பட்டுள்ளார்.
கட்சியின் துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், இளைஞர், மகளிர் பிரிவுகளின் தேர்தல்கள் ஏக காலத்தில் நடைபெறுகின்றன.
நேரடியாகவும், ஓன்லைன் மூலமாகவும் நடைபெற்று வரும் பிகேஆர் தேர்தலில் நாடு தழுவிய நிலையில் 32 ஆயிரத்து 30 பேராளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரைக்குமான பிகேஆர் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்குக் களமாக இந்த மாநாடு அமைகிறது. இளைஞர் மகளிர் மாநாடு ஜோகூர்பாரு,பெர்ஜெயா வாட்டர்பிஃராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற வேளையில் தேசிய பேராளர் மாநாடு ஜோகூர்பாரு, டங்கா பே மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் மொத்தம் 251 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மத்திய செயலவைக்கு 104 வேட்பாளர்களும், இளைஞர் பிரிவுக்கு 85 வேட்பாளர்களும், மகளிர் பிரிவுக்கு 62 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
கட்சியின் துணைத் தலைவர் தேர்தல், பிகேஆர் உறுப்பினர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களின் கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது. துணைத் தலைவர் தேர்தலில் கட்சியின் நடப்புத் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லிக்கும், உதவித் தலைவரான நூருல் இஸா அன்வாருக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில் 4 உதவித் தலைவர் பதவிக்கு 12 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவு இன்றிரவுக்குள் அறிவிக்கப்படலாம் என்று தேர்தல் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தபா அறிவித்துள்ளார்.