சிகமாட், மே.23-
சாலையில் திடீரென்று குறுக்கே சென்ற நாய் ஒன்றை மோதுவதிலிருந்து தவிர்க்க, வாகனத்தைத் திருப்பியதில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், லோரியுடன் மோதியதில், நபர் ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் மனைவி கடும் காயங்களுக்கு ஆளானார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் ஜோகூர், ஜாலான் மூவார்-சிகமாட் சாலையின் 56 கிலோமீட்டரில் சிகமாட் அருகில் நிகழ்ந்தது.
அத்தம்பதியர் பயணித்த எஸ்யுவி ரக வாகனம், லோரியுடன் மோதியதில் வாகனத்தில் அமர்ந்திருந்த தாமான் மிடாவைச் சேர்ந்த 37 வயது டேவிட் சுஸ்ஸாஸ் உயிரிழந்த வேளையில், வாகனத்தைச் செலுத்திய அவரின் 36 வயது மனைவி பி. வனிதா கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
தம்பதியர் பயணித்த நிசான் ஏஈண்-டிரேயில் வாகனம், ஸ்கானியா ரக லோரியின் பின்புறம் மோதியதாக சிகமாட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஸம்ரி மரின்சா தெரிவித்தார்.
அந்தத் தம்பதியர், மூவாரிலிருந்து சிகமாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதில் கடும் காயங்களுக்கு ஆளாகிய வனிதா, சிகமாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அஹ்மாட் ஸம்ரி தெரிவித்தார்.