ஜோகூர் பாரு, மே.23-
பிகேஆர் கட்சிக்கு புதிய உறுப்பினரான டத்தோஸ்ரீ ரமணனுக்கு, கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவதற்கு ஒரு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கடுமையாகஒ குறைக் கூறிய போதிலும், ரமணனை ஒரு வேட்பாளராகக் கொண்டு வருவதற்குத் தாம் எடுத்துள்ள முடிவை கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தற்காத்துப் பேசினார்.
அதே வேளையில் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் தாம் ரமணனுக்குச் சிறப்புச் சலுகையை வழங்கி வருவதாக ரஃபிஸி முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் டத்தோஸ்ரீ அன்வார் மறுத்தார்.
ஜோகூர்பாரு, பெர்ஜெயா வாட்டர்பிஃரண்ட்டில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வாக்களிப்பு முடிந்தப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டத்தோஸ்ரீ அன்வார், ரமணனுக்கு சீட் வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பி வரும் ரஃபிஸியின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்தார்.
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி, இது போன்ற குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக முன்வைப்பதற்கு முன்னதாக, கட்சியின் தலைமைத்துவக் கூட்டத்தில் எழுப்பியிருக்கலாம் என்று அன்வார் குறிப்பிட்டார்.
இருப்பினும் இன்று நடைபெறவிருக்கும் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் இவ்விவகாரத்தை விவாதிக்கலாம் என்றார் அன்வார்.
மஇகாவின் பொருளாளர் பதவி வகித்த ரமணன், அக்கட்சியிலிருந்து விலகி, பிகேஆரில் இணைந்த இரண்டாவது ஆண்டிலேயே அவருக்கு சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியை டத்தோஸ்ரீ அன்வார் பரிசாகத் தந்ததாகவும், அடுத்த ஒரு வருடத்திலேயே துணை அமைச்சராக நியமித்ததாகவும், தற்போது கட்சியின் மூன்றாவது முக்கியப் பதவியான உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட அனுமதித்து இருப்பதாகவும், ரஃபிஸி கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஒருவர் பிகேஆர் கட்சியில் சேர்ந்த 4 ஆண்டுகளிலேயே கட்சியின் உயரிய பதவியான உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியும் என்று கட்சியின் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் ஆசீர்வதிக்கின்றார் என்றால் கட்சியில் சட்டத் திட்டங்கள் இருந்து என்ன பலன் என்று ரஃபிஸி ரம்லி கேள்வி எழுப்பினார்.
புதிய உறுப்பினர்களுக்குக் காட்டப்படும் சலுகை விவகாரத்தில், கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் அன்வாருக்கு உள்ள சிறப்பு அதிகாரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ரஃபிஸி சில தினங்களுக்கு முன்பு பேராளர்களைக் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.