சிரம்பான், மே.23-
நாட்டில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான 125 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட சிரம்பான், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளிக்குத் திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலைக் கட்டுமானத் திட்டத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட்டை சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் நன்கொடையாக வழங்கினார்.
பல தரப்பட்ட வசதிகளைக் கொண்ட ஒரு முன்னுதாரணப் பள்ளியாக விளங்கும் சிரம்பான், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் தற்போது 710 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலை வசதிகள் மேம்படுத்தப்படுமானால் ஆயிரம் மாணவர்கள் பயிலக்கூடியப் பள்ளியாக லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் தரத்தை உயர்த்த முடியும் என்றார் அந்தோணி லோக்.
பள்ளி பொறுப்பாளர்களிடம் நன்கொடைக்கான மாதிரி காசோலையை ஒப்படைக்கும் நிகழ்வில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.