சிரம்பான், மே.23-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முறையாக நிர்வகிக்கப்பட்டு வரும் இந்து ஆலயங்களுக்கு தேவஸ்தானம் என்ற அங்கீகாரம் வழங்கப்படுவதற்கு மலேசிய இந்து சங்கத்திடம் பரிந்துரைக்கப்படும் என்று சிவஸ்ரீ டாக்டர் A.L. ஆனந்தகோபி சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்து சங்கத்தின் நெகிரி செம்பிலான் மாநில பேரவையின் தலைவருமான டாக்டர் ஆனந்தகோபி சிவச்சாரியார், முறையான கணக்கு வழக்கு, ஆலய நிர்வகிப்பில் முன்னுதாரணப் போக்கு, ஆண்டுக் கூட்டம் நடத்தப்படும் முறையில் தெளிவு உட்பட பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய ஆலயங்களுக்கு தேவஸ்தானம் என்ற அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
சிரம்பான், ஜாலான் துவாங்கு ஜாபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் சிவன் ஆலயத்திற்கு அண்மையில் மலேசிய இந்து சங்கத்தின் மூலம் தேவஸ்தானம் அந்தஸ்து வழங்கப்பட்டு இருப்பதை ஆனந்தகோபி சிவாச்சாரியார் சுட்டிக் காட்டினார்.
இந்த ஓர் ஆலயத்திற்கு மட்டுமே தேவஸ்தானம் என்று அங்கீகாரம் கொடுக்கப்பட்டதா? என்றால் இல்லை. ஆலய நிர்வகிப்பில் ஒரு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய ஆலயங்களுக்கு தேவஸ்தானம் அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று ஆனந்தகோபி சிவாச்சாரியார் தெளிவுபடுத்தினார்.
ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் ஆலயத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கணக்காய்வாளர் நிறுவன அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து கணக்கு விவரங்களைச் சமப்பித்தனர். ஆலயத்தின் வரவு செலவு மட்டுமின்றி வங்கியில் இருக்கக்கூடிய பண இருப்பு, நகைகள், சொத்து விபரங்கள் உட்பட அனைத்தும் முறைப்படி மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஆனந்தகோபி சிவாச்சாரியார் விவரித்தார்.
இவ்வாறு ஒவ்வொரு ஆலயமும் செயல்படும் போது, சங்கங்களின் பதிவு அலுவலகமான ஆர்ஓஎஸ் ROS, ஆலயப் பதிவை ரத்து செய்வது உட்பட இதர சிக்கல்கள் தோன்றுவதைத் தவிர்க்க முடியும் என்று நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்களின் அர்ச்சகர் சங்கத்தின் தலைவருமான ஆனந்தகோபி சிவாச்சாரியார் வலியுறுத்தியுள்ளார்.