கோலாலம்பூர், மே.24-
அரச மலேசிய போலீஸ் படையின் 218 ஆவது போலீஸ் தினத்தையொட்டி, இந்து மதத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையமான புலாபோல்- லில் ( Pulapol ) உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாட்டுடன் விமரிசையாகக் கொண்டாடினர்.
போலீஸ் தினத்தை நினைவுகூரும் வகையில் இவ்வாலயத்தில் 5 ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளரும், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புப் பிரிவின் துணை இயக்குநருமான டிசிபி டத்தோ கே. குமரன் தலைமையேற்றார்.
இதில் சேவையில் உள்ள போலீஸ்காரர்களுடன், பணி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ்காரர்களும், அவர்களின் குடும்பதினரும், Pulapol பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் இந்து மதத்தைச் சேர்ந்த பயிற்சி போலீஸ்காரர்களில் 35 பேரும் கலந்து கொண்டனர்.
மாலை 3 மணியளவில் யாகம் வளர்க்கப்பட்டு, ஸ்ரீ முனீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, மாலை 7 மணிக்கு நித்தியப் பூஜையுடன் சிறப்பு வழிபாடு தொடங்கியது.
இந்த சிறப்பு வழிபாடு, போலீஸ் தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறுவது வழக்கமாகும் என்று டிசிபி டத்தோ குமரன் குறிப்பிட்டார்.
தங்களின் நோக்கமானது, வேலைப் பளுவின் மத்தியில் இது போன்ற நிகழ்வில்தான் இந்து சமயத்தைச் சேர்ந்த அனைத்து போலீஸ்காரர்கள் ஒன்றுகூட முடியும். எனவேதான், இந்த நிகழ்விற்குப் பெரும் முயற்சி எடுத்து, இதனைத் தொடர்ந்து செய்து வருகிறோம் என்று டத்தோ குமரன் குறிப்பிட்டார்.
அத்துடன் கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்திற்குள் ஓர் ஆலயம் இருப்பது பலருக்குத் தெரியாது. இதனை இவ்வாலயத்தை இந்து போலீஸ்காரர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்த போதிலும். இந்த Pulapol மையத்தில் ஓர் ஆலயம் இருப்பது மூலம் பயிற்சி பெற வருகின்ற இந்து சமயத்தைச் சேர்ந்த பயிற்சி போலீஸ்காரர்கள், வழிபடுவதற்கு வெளியே செல்ல வேண்டியதில்லை. தங்கள் வழிபாட்டுத் தலமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று டத்தோ குமரன் தெரிவித்தார்.
போலீஸ் தின சிறப்பு வழிபாடு, Pulapol, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடுவதற்கு மற்றொரு நோக்கம், இந்த ஆலயத்தை பொது மக்களுக்குப் பிரபலபடுத்துவதாகும் என்று டத்தோ குமரன் விவரித்தார்.
இரவில் விருந்து உபசரிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற முக்கியப் பிரமுகர்களுக்கு டத்தோ குமரன் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினர் சிறப்பு செய்தனர்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிறப்புப் பிரிவின் முதிர்நிலை உதவி கமிஷனரும், ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான எஸ்ஏசி ஜி. சீத்தாதேவி உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ்காரர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பும், உதவியும் நல்கிய அரச மலேசிய போலீஸ் படையின் தலைமைத்துவத்திற்கும், ஆதரவு நல்கிய, ஓய்வு பெற்ற போலீஸ்காரர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் டத்தோ குமரன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.