பிகேஆர் பேராளர் மாநாட்டில் பலரைக் கவர்ந்தவர்கள் நூருல் இஸா மற்றும் டத்தோஸ்ரீ ரமணன்

ஜோகூர் பாரு, மே.24-

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் மத்தியில் பேராளர்களின் அபரிமித ஆதரவைப் பெற்று, பிகேஆர் மாநாட்டில் மிகுந்த கவன ஈர்ப்புக்குரியவர்களாக மாறியவர்கள் நூருல் இஸா மற்றும் டத்தோஸ்ரீ ரமணன் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

மிகப் பரபரப்பாக நடைபெற்ற பிகேஆர் தேர்தலில் நடப்பு துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியைத் தோற்கடித்து கட்சியின் புதிய துணைத் தலைவராக நூருல் இஸா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நூருல் இஸாவிற்கு 9,803 வாக்குகள் கிடைத்தன.

அதே வேளையில் நான்கு உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் சுங்கை பூலோ பிகேஆர் தொகுதித் தலைவரும், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஆர். ரமணன் 5,895 வாக்குகள் பெற்று கட்சியின் இரண்டாவது உதவித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் பிகேஆர் கட்சியின் பதவி வரிசையில் தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது நிலையில் உள்ள மிகப் பெரிய பொறுப்பான உதவித் தலைவர்களில் ஒருவராக டத்தோஸ்ரீ ரமணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் மந்திரி பெசாரும், சிலாங்கூர் பிகேஆர் தொடர்புக் குழுத் தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, முதலாவது உதவித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 7,955 வாக்குகள் கிடைத்தன.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன், 5,889 வாக்குகள் பெற்று கட்சியின் மூன்றாவது உதவித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்காவது உதவித் தலைவராக 5,757 வாக்குகள் பெற்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் சாங் லீ காங், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் மத்தியச் செயலவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸ்ரீ செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ்- ஜும் ஒருவர் ஆவார். அவருக்கு 4,699 வாக்குகள் கிடைத்தன.

WATCH OUR LATEST NEWS