லஞ்ச ஊழலைத் துடைத்தொழிப்பதில் அஸாம் பாக்கியைப் போல் திராணி மிக்கவர்கள் யாரும் இல்லை: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் புகழாரம்

ஜோகூர் பாரு, மே.24-

நாட்டில் லஞ்ச ஊழல் வேர்களை முழு வீச்சில் வேரறுப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம்மின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியைப் போல் திராணி மிக்கவர்கள் யாரும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழ்மாலை சூட்டினார்.

அஸாம் பாக்கியின் பதவி ஒப்பந்த காலம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டு இருப்பதை டத்தோஸ்ரீ அன்வாரின் புதல்வியும், பிகேஆர் கட்சியின் புதிய துணைத் தலைவருமான நூருல் இஸா உட்பட பல்வேறு தரப்பினர் கடுமையாகக்
குறைகூறிய போதிலும், அந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையரின் பதவிக் காலத்தை அரசாங்கம் மீண்டும் நீட்டித்திருப்பதை பிரதமர் தற்காத்துப் பேசினார்.

ஜோகூர் பாரு, பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நேற்று இரவு பிகேஆர் கட்சியின் பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்து, கொள்கை உரையாற்றிய போது, டத்தோஸ்ரீ அன்வார், அஸாம் பாக்கியின் துணிகரச் செயலைப் பாராட்டினார்.

நாட்டின் வளங்களைக் கோடிக் கணக்கு ரிங்கிட் மதிப்பில் சுருட்டியவர்கள், பெரும் பணக்காரர்கள் மற்றும் பெரிய தவுக்கே ஆகியோருக்கு எதிராக ஊழல் தொடர்பில் துணிகரமாக எஸ்பிஆர்எம் நடவடிக்கை எடுத்து இருப்பது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

அதுவும் அஸாம் பாக்கியினால் மட்டுமே இது சாத்தியமானது என்று பிரதமர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS