பூச்சோங், மே.24-
பூச்சோங், தாமான் பூச்சோங் இந்தானில் உள்ள ஓர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் 47 வயது நபர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
இன்று சனிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் அந்த ஆடவர், தனது காதலியுடன் இருந்த போது, இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது.
அந்த நபரைத் தாக்கியவர், அவர் காதலியின் முன்னாள் கணவன் என்று கூறப்படுகிறது. தாங்கள், வீட்டில் இருந்த போது தனது காதலன் தாக்கப்பட்டு விட்டதாகச் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து அவசர அழைப்பைப் போலீஸ் பெற்றதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பைஃருஸ் ஜாபார் தெரிவித்தார்.
காதலனும், காதலியும் ஒரே வீட்டில் தங்கியிருந்த போது அந்தப் பெண்ணின் முன்னாள் கணவர், இரும்பினால் அந்த நபரைக் கடுமையாகத் தாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலை அந்தப் பெண்ணின் காதலனும், 30, 40 வயது மதிக்கத்தக்க மேலும் இரண்டு நபர்கள் நடத்தியுள்ளனர் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கடுமையாகக் காயமுற்ற நபர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் பொறாமையின் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.