சுங்கை பூலோ, மே.25-
கூண்டில் இருந்த குரங்கின் மீது சாயம் தெளித்ததாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரை வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலிதான் தடுத்து வைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த சுங்கை பூலோ மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ஹாபிஃஸ் முகமட் நோர் குறிப்பிடுகையில், பெட்டாலிங் மாவட்ட கால்நடை அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பரவிய 5 வினாடி காணொளியைக் கண்ட பிறகு, இன்று அதிகாலை 2.10 மணியளவில் இது குறித்து புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஷா ஆலம், தாமான் டேசா மொச்சிஸ், யு17 இல் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 86இன் கீழ் அந்த நபரை கைது செய்ய பெர்ஹிலிதான் ஒரு காவல் துறை புகாரையும் பதிவு செய்துள்ளது.