பெங்களூரு, ஜூன்.05-
பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெங்களூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர். அப்போது, பெங்களூரு அணி வீரர்களைப் பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மைதானத்தில் 2.5 லட்சம் பேர் கூடினர். நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் ஆண்கள். 5 பேர் ஆண்கள். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வழக்கு விசாரணை பத்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.