பெட்டாலிங் ஜெயா, ஜூன்.11-
மதம் மாறி, தனது மூன்று பிள்ளைகளையும் மதம் மாற்றி, சர்ச்சைக்குரிய நபராக மாறி, தனது மனைவி லோ சியூ ஹோங்கின் சட்டப் போராட்டத்தை எதிர்நோக்கியிருந்த முகமட் நாகேஸ்வரன் முனியாண்டி காலமானார்.
தனது 38 ஆவது வயதில் நாகேஸ்வரன் முனியாண்டி காலமானதை லோ சியூ ஹோங்கின் வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் தின் உறுதிப்படுத்தினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தனது மூன்று பிள்ளைகளையும் பெர்லிஸ் மாநிலத்திற்குக் கொண்டு சென்று, தனது மனைவி லோவிற்குத் தெரியாமல் ஒரு தலைபட்சமாக இஸ்லாமிய சமயத்திற்கு மதம் மாற்றியதாக நாகேஸ்வரனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அந்த மூன்று பிள்ளைகளையும் இந்து மதத்திற்குத் திருப்புவதில் லோ, கூட்டரசு நீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிக் கண்ட நிலையில் தனது கணவருக்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள வழக்கின் பூர்வாங்க விசாரணை நடைபெறும் வேளையில் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.